Friday, December 27, 2013

இஸ்ஸ்கூல் போவோமா - பகுதி-1

முதல்தடவை போகும்போதே விளங்கிட்டோம்!!!???  இப்போ யென்னவாம் . . அது தானே  உங்க கேள்வி. . சங்கதில பதிவு படிக்கிற அளவுக்கு வெட்டியாதான இருக்குறீங்க . . .சும்மா வாங்க பாஸ். படிச்சவன் நம்ம நாட்டுல MLA, MPஆரானோ இல்லியோ கண்டிப்பா அவன் ஸ்கூல் காலேஜ் வைக்ணும். அது தானே கரெக்ட்டு..பின்ன எப்படி வளர்ச்சிப் ( யாரோட ? ? ) பணிகளுக்கும், நலச்சேவைகளுக்கும் ( இடியாப்பம் மாதிரி இருக்குமே . . . . அது இல்லங்க ) நிதி திரட்ட முடியும்.


மிகத்தரமான பள்ளிகள் என்றும், அறிவின் ஊற்று, 
குடம்,சொம்பு, என்றும் சோப்பு, சீப்பு,
பேஸ்ட் விளம்பரங்களுக்கு இணையாக தன்னை சந்தையிட்டு கொள்ளும் பள்ளிகள் ஒரு புறம். இன்னொரு புறம் JUNE மாதம் ஆரம்பிக்கும் பள்ளிகளுக்கு FEB மாதமே அட்மிஷன் முடிந்து விட்டது என்று வறட்டு மூடம் போட்டுக்கொள்ளும் பள்ளிகள் ஒருபுறம். கேட், வாட்ச்மன், காம்பவுண்டு   க்யூ, பட்டு புடவை வாங்க வந்தது போல் கூட்டம், அதே பட்டுப்புடவை விலையில் அப்பிளிகேஷன் என்று அனைத்தையும்  முடித்தபின்னும் முடிவதில்லை இந்த ஷங்கர் பட பட்ஜெட் பள்ளிகளின் ஜம்பங்கள் . . நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ? ? என்ற கேள்வி இந்த பெற்றோர்கள் சங்குக்குழியில் துடிப்பதை பார்த்திருக்கிறேன். அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை கூட இந்தக் கேள்விகள் சரி என்றாலும் "மறைக்கப்பட்ட தன் முதல் காதல்" போல் வைத்து கொள்கிறார்கள்.

பள்ளிகளில் நுழைவுத்தேர்வு

முன்னொரு காலத்தில், ஐந்து வயது நிரம்பியதர்கான சான்று கழுத்தை சுற்றி காதை தொடும் திறன் இருந்தால் போதும் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கலாம். ஆனால் இன்று மேற் கூறிய பட்டியலில் உள்ள பள்ளிகள் முதல், தம்படிக்கு பெறாத பள்ளிகள் வரை கச்சைக்கட்டிக் கொண்டு நுழைவுத்தேர்வு நடத்துகின்றன. அடுத்து, அந்த தேர்வின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் பள்ளியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.இது தவிர, சேர்மேன், கவுன்சிலர்  போன்ற உயர்ந்த பதவி வகிப்பவர்களின்  கடிதம், வைட்டமின் M(தெரியாதவர்கள் சூது கவ்வும் பட காணா பாலா பாட்டை கேட்கவும் ) போன்ற அதிஜனநாயக முறைப்படியும் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. இதில் நமது கேள்வி, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கான பள்ளி என்று ஏன் விளம்பரம் செய்ய வில்லை என்பதல்ல. ஒரு பணியமர்வுக்கு, தொழில்நுட்ப-படிப்பு, மருத்துவம் போன்ற சேர்க்கைகளில் நுழைவுத்தேர்வு அவசியம். அங்கே மதிநுட்பம், தகுதி போன்றவை கொண்டு  தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி ஒரு கட்டாயம் பள்ளிகளில் எதற்கு????இந்த கேள்விக்கு பல ஹார்வர்ட் மண்டைகளின் பதில் - The Tests are basically focussed to test on Basics of Lanuguage, mathematics and  Logic. ( இந்த தேர்வுகள், குழந்தைகளின் மொழி, கணிதம், மற்றும் சில அடிப்படைகளை சோதிக்க அமைக்கப்பட்டவை என்பதே இதன் அர்த்தம்) . அடிப்படைகள் கூட தெரியாத குழந்தைகளை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும் ? ?
தம்பி ஒரு சோடா ஒடப்பா என்னும் அளவுக்கு அருமையான பதில். . . அது நல்லவார்த்தை சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது . . . இந்த வலது கைய்ய இடது நெஞ்சுல வச்சமாதிரி ஒரு வார்த்தை சொல்லுவாங்கல்ல . . . சூப்பர்ங்க....... கரெக்டா கண்டுபுடிசீங்க . . மனசாட்சியே தான் . . உங்களுக்கு 10 பாய்ண்ட. 
இங்கு மதிப்பெண் அடிப்படையில் ஒரு குழந்தையை தேர்வு செய்யும் பொழுது - அந்தக் குழந்தை இயற்கையிலேயே தகுதி உடைய பிள்ளை அல்லது முன்னமே போதிக்கபட்ட பிள்ளை என்பது மறுக்க முடியாது. இந்த அடிப்படையில் ஒரு குழந்தையை சேர்த்து கொள்ளும் பொழுது அந்த பள்ளியோ, ஆசிரியரோ தனது பணியை எளிமையாக முடித்துக் கொள்ளலாம் ( நோகாம நோம்பு .. . . ஸ்டைல் ). ஆகையால்  இந்த பள்ளிகளின் தனித்தகுதி என்பது கேள்விகுறி ஆகிறது. ஒரு இயலை புரிந்துகொள்ளும் திறன், புரிந்ததை நினைவு படுத்தும் திறன், நினைவுகூர்ந்ததை சரியாக வெளிப்படுத்தும் ( எழுதும் ) திறன் இவை மூன்றையும்  அடிப்படையாக கொண்டது தான் கல்வி. இந்த மூன்று திறனும் வேறு வேறு கலவையில் குழந்தைகளிடம் இருக்கும். இந்த நுழைவுத்தேர்வுகள் இந்த மூன்று அடிப்படையை பரிசோதித்து, இந்த மூன்றும் முன்னமே ஒருங்கே பெற்ற குழந்தைகளை சேர்த்துக் கொள்கின்றன. அதாவது, இன்னும் சரியாய் சொன்னால் தன்னுடைய சுயஆதாயங்களுக்காக, பள்ளிகள் தன்னுடைய கடமையிலிருந்து விலகிக்கொள்கின்றன. அடுத்த கட்டமாக முன்னமே திறமையான குழந்தைகளை தேர்ச்சி பெறசெய்ததின் வெற்றியை தன் பெயரில் தம்பட்டம் அடித்து ஈன பிழைப்பு நடத்துகின்றன.

சச்சின் இயற்கயிலேயே நல்ல BATSMAN. அவரிடம் இருக்கும் திறமையை அவருடைய இளம் வயதிலேயே புரிந்து கொண்டு அவருக்கு பயிற்சியும் கொடுத்தார் ரமாகாந்த் அச்ரேகர். ஆனால் சச்சின் என்ற இந்திய விளையாட்டு வீரரின் வெற்றிக்குக் காரணம் அச்ரேகர் ஆகி விட முடியாது. கமல், மற்றும் ரஜினி போன்ற நடிகர்கள் தன்னுடைய குருநாதர் என்று உரக்கச் சொல்லும் பெயர் கே. பாலசந்தர் என்பதுதான். ஆயினும் இந்த இருவரின் திறமையை இணைசெய்யும் அளவிற்கு கே.பி`யின் திறமையும் உலகமரிந்ததே. ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே கே.பியோ அச்ரேகரோ, கமலையும், சச்சினையும் தேர்வு செய்யாமலோ, பயிற்சி குடுக்காமலோ இருந்திருந்தால் அவர்கள் தன்னுடைய கடமையிலிருந்து தவறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அப்படி அவர்கள் தேர்வோ/பயிற்சியோ கொடுக்காததால் சமுதாயத்துக்கு எந்த இழப்பு / நஷ்டம் இல்லை. ஆனால் பள்ளிகள் இதை செய்யும் பொழுது நேரடியாகவும், மறைமுகமாகவும் -  அந்த ( வாய்ப்பு மறுக்கப்பட்ட) குழந்தையின் நாளைய சமூகமும் , அந்த பெற்றோற்களின் இன்றைய சமூகமும் நேரடியான பாதிப்பிற்குள்ளாகின்றன. இன்னும் இந்த அவலத்தை உற்றுப்பார்கையில், மேற்கூறிய தகுதிகள் மிகக் குறைவாக உள்ள பிள்ளை - ஒரு அத்தியாவசிய மருத்துவ உதவி மறுக்க பட்ட, இன்னும் ஒருபடி மேலேபோய் அடிப்படை குடிமையில் உரிமைகள்(civil rights) மறுக்கப்பட்ட  நிலையெனலாம்.
பள்ளிக் கல்விகளை ஒருங்கு செய்யும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் RTE ( Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009),சட்டமும் பள்ளிகளை தேர்வு அடிப்படையில் சேர்கை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்துகிறது.  

                                                                                                          . . . தொடரும். . .