Monday, April 3, 2017

டோரா திரை விமர்சனம்

தமிழின் இன்னொரு பேய்ப்படம் "டோரா ".  நான் வியந்து ரசிக்கும்  ஒரு படமான " வாகை சூட வா "திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹிதேஷ் ஐபக் தயாரிப்பில், டிக் டிக் டிக் என்று பெயர் வைப்பதாக இருந்து பின்பு "டோரா"வாக வெளிவந்திருக்கும் அமானுஷ்ய + நகைசுவை திரைப்படம்.
  

முன்பு சற்குணத்திடம் உதவி இயக்குனராக இருந்த தாஸ் ராமசாமி என்பவரின் முதல் திரைப்படம். இதுதான் கதை, இதுதான் அதன் வெளிப்பாடு, இந்த கதாபாத்திரம் இது மட்டும்தான் பேசும் என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டு, இந்த திரைப்படத்தை இயக்குனர் நகர்த்தியுள்ளார், வாழ்த்துக்கள் - இதில் சரி, தவறு என்பதற்கான விவாதங்கள் இல்லை. ( வரலாற்று உண்மைகளை சுய லாபத்திற்காக மாற்றி பேசாதவரை, சமூக அக்கறை இல்லாமல் போகும் வரை ).  பயன்படுத்திய கார்கள் வாங்கும் கார் கடைகளில் ஒரு கால் டாக்சி ஆரம்பிக்க என்னும் இருவர் கார் வாங்க வருகின்றனர் . மைலேஜ், விலை, லுக் போன்ற ஆராய்ச்சிகளில் இருக்கையில் மிகப் பழைய ஒரு கார் பிடித்துப் போகிறது . வேண்டுமென்றால் கதாநாயகி இதுதான் வேண்டுமென்று தன் தந்தையிடம் அடம் பிடித்து வாங்கியிருப்பது போல் காட்சியை நகர்த்தியிருக்கலாம் ஆனால் அப்படி இல்லாமல் " அப்பா யோசிச்சு பாருங்க காமராஜர் ஒட்டிய கார், எம் ஜி ஆர் போன கார் " என்று பழைய கார் வாங்குவதற்கான ஒரு பலமான ஒற்றை காரணத்தை பதிவு செய்கிறார்ல் - நல்லது. அது மட்டுமல்லாமல் காரின் நிழலில் அதை ஆட்க்கொண்டிருக்கும் நாயின் வடிவம் தெரிவது போல் காட்டியதும் பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் இரண்டாவது கொலைகாரனை கொல்லும் சேஸ் - சபாஷ்.

படத்தின் முதல் பகுதி நகைச்சுவையாகவும் இரண்டாவது பகுதி அமானுஷ்யங்களும் என்று கதை அமைக்கப் பட்டிருக்கிறது. முதல் பகுதியில் வரும் பவளக் கொடி - சத்யம் வகை நயன்தாராவை கண்முன் கொண்டுவருவது தவிர்க்க முடியவில்லை, தவிர காவல் நிலையத்தில் உத்தமனுடன் பேசும் காடசிகள் அந்நியன் விக்ரமை உங்களுக்கு நினைவு படுத்தினால் - அது உங்கள் தவறல்ல. மிகத் தெளிவான கதைக் களம் முடிவு செய்தாலும், அதை சரியாக இயக்கி இருந்தாலும் நடிகர்களிடம் புதுமையை தேடுவது, நடிப்பில் மாற்றம் கொண்டுவர முயல்வது இயக்குனரின் கையில் இருக்கிறது . தவிர படத்தின் "வசனங்கள்" எந்த தாக்கமும் இல்லாமல் பிஞ்சு குழந்தை கையில் பட்ட அடிபோல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை . புதிய இயக்குனர் - இவர் உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டு. இதே கதைக்களத்தில் - ஒரு பேய் ஒரு காருக்குள் புகுந்து பழி வாங்கும் கதைக் களத்தில் 2004ல் டார்ஸான் - தீ வொண்டர் கார் என்ற ஹிந்தி திரைப்படம் வந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது

விவேக் - மேர்வின் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள் என்று சொல்லலாம். மோதிப் பாரு வந்திருக்கா டோரா மிக அருமை. தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை முழுமையாக சரியாக பயன்படுத்திய இவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.

மற்றவர்களுடைய கருத்துக்கு மாறாக -  நயன்தாரா இன்னும் சற்று முயற்சி செய்திருக்கலாம் என்றே எனக்குப் படுகிறது. தனது திறமையை சோதிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை நயன் தவற விட்டதாகவே நினைக்கிறேன்.

தம்பி ராமையா, உத்தமண்,  சுலில் குமார்  ( அல்லது ) தருண் போன்றவர்கள் சொன்னதை செய்திருக்கிறார்கள் மற்றபடி புதுமைகள் எதுவும் இல்லை. பாலிவுட்களில் அளவெடுத்து வரைந்த  நெற்றி பொட்டு, கருப்பு நிறம் போன்ற க்ளிஷேக்களில் இன்னும் தமிழர்களை அணுகுவது, எரிச்சலாக இருக்கும், அவர்கள் பேசும் தமிழ் கூட சரியாக இருக்காது. கோடிகளில் செலவு செய்யும் பொழுது நல்ல தமிழ் பேசும் இரண்டு பேர் வைத்து வாய்ஸ் ரெக்கார்டிங்க் செய்தால் என்ன கேடு என்று கேட்க தோன்றும் . அதே போல்தான் இன்னும் பான்பராக்கில் வட மாநிலத்தவரை அணுகுவது, ஆகக்  கொடுமையான ஹிந்தியில் அந்த கதாபாத்திரங்கள் பேசுவது என்பது தமிழ் திரைப் படங்களின் சிக்கல். சௌகார்ப்பெட்டில் இலவசமாக ஹிந்தி பேச - நயன்தாரா ரசிகர் ஒருவர் கூட கிடைக்காமலிருப்பது வியப்பே ??

டோரா  - போய் பாருங்க ஒரு தப்பா

* *  * *  * * ** * * *** * * * * * * * * *  * *  * * ** * * *** * *

இந்திய சினிமாவின் சாபமா இல்லை வரமா ?  -  ஒரு கதை அல்லது ஒரு காதைக்காண ஒற்றை முடிச்சு வெற்றிபெற்று விட்டால் அதையே நீர்த்துப் போகும்வரை முன்பு சுரண்டிய அதே லாட்டரியை மீண்டும் மீண்டும்  சுரண்டி தனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது . புரியும்படி சொல்லவேண்டுமானால் ஒருவர் ஒரு தெரு முனையில் வடைக் கடை போட்டு நல்ல வருமானம் பார்த்தால், அதே தெருவில் நடுப் பகுதியில் இன்னொருவர் வடை கடை வைப்பது போல், திரைப்படங்கள் எடுப்பது.  இதற்க்கு இயக்குனர்கள், சினிமா வடடாரத்தில் சொல்லப்படும் ஒரு மிகப் பெரிய காரணம், தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் இப்போது இதுதான் விற்பனை ஆகிறது, பேய்க்கதை இருந்தா சொல்லு  . . . என்கிறார்கள்.

Tuesday, February 28, 2017

கோடிகளும் சினிமாக்களும்


Image result for box office collection


ஓவ்வொரு அப்பாடக்கர் படம் வரும்போதும் இத்தனை கோடி அத்தனை கோடின்னு உதார்வுட்டுகிணு  ரசிக சிகாமணிகள் கிளம்புவாங்க.  இந்திய சினிமாவிற்கு சில ஆண்டுகள் முன்புவரை படம் நல்லாருக்கு படம் நல்லால்ல, ஹிட் பிளாப் இவ்வ்ளோதான் அதுக்குமேல சில்வர் ஜூபிலி, 100 நாள் கொண்டாட்டம், இன்னும் கொஞ்சம் முன்னாடி போனால் வைர விழா போன்றவைதான் யதார்த்த சினிமா ரசிகனின் பார்வைக்கு வைக்கப் பட்டது.

இன்று அந்த சினிமாவின் வசூல் வெற்றியின் ஒரு மிக முக்கிய லட்சினையாக முன்னிறுத்தப் படுகிறது, இது ஒரு திரைப்படத்திற்கு சரியான அளவுகோல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலில் இந்த வசூல் பற்றிய செய்தியில் சொல்லப்படும் 100 கோடி கணக்கு பெரியா ஆளுமை இல்லை என்பது என் கருத்து.    தமிழகத்தில் மட்டும் 7 கோடி மக்கள் வசிக்கின்றனர். கபாலி போல் அல்லாமல் ஒரு டிக்கட் 100 ரூவாய்க்கு விற்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம்

100 கோடி வசூல், ஒரு டிக்கட்டின் விலை ரூபாய் 100 என்றால் சராசரியாக 1 கோடி பேர். அதாவது சராசரியாக சென்னையின் மக்கள் தொகையே 1 கோடியை விட அதிகம். தமிழகத்தின் சரிபாதி மக்கள் கூட பார்க்காத திரைப்படம் என்றே பொருள் படும். தவிர BO என்பது உலக வசூல் பற்றிய கணக்கு, ஆக இந்த கணக்கு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான நல்ல அளவு ஆகாது.

வாகை சூட வா என்ற திரைப்படம் நான் என்றென்றும் அனைத்து தளங்களிலும் உயரப் பிடிக்கும் ஒரு படம். பெரிய வசூல் இல்லை. அரவான் போன்ற திரைப்படங்களும் அப்படித்தான். உலக சினிமாவிலும் பல மிக சிறப்பான படங்கள் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், போன்ற திரைப்படங்கள் வசூலில் பெரிய சாதனைகள் புரியவில்லை.

திருடா திருடி நல்ல வசூல், தன் சமகாலத்தில் வேறெதுவும் நல்ல படங்கள் இல்லாததாலேயே பெரிய வெற்றி. ஆக வசூல் என்ற அளவீடோடு ஒரு சினிமாவின் வெற்றியை யதார்த்த ரசிகன் அணுகுவது சரியல்ல


ஆங்கிலத்தில் படிக்க   http://hemloc.blogspot.in/2017/02/crores-and-cinema.html

Thursday, September 22, 2016

பிங்க் திரைப்படம் திரைவிமர்சனம்

ஆமாம் அவனோடு உடலுறவு கொள்வதற்காக நான் காசு கேட்டேன், பின்பு அவனோடு உறவு கொள்ள விருப்பமில்லை மனதை மாற்றிக் கொண்டேன், அவனிடம் அதை சொல்லவும் செய்தேன். பின்பு என்னை அவன் கட்டாய படுத்தினான். நான் மறுத்தேன். அவன் என் மேல் பலம் ப்ரோயோகித்தான், தடுத்தேன், அவன் கேட்பதாயில்லை. அதனால் கையில் கிடைத்த ஒரு பொருளால் அவனைத் தாக்கினேன்.

ஒரு ஆணை விபச்சாரத்திற்காக அழைத்ததாகவும், மேலும் அவரை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த்தாகவும் குற்றம் சுமத்தப் பட்ட ஒரு பெண், தனது தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கும் வாதங்களைத்தான் இவை.

இன்னொரு காட்சியில் வழக்கறிஞர்  நீங்கள் இன்னமும் கன்னித்தன்மை உடைய பெண்ணா ? என்று கேட்க்கிறார். இது போல் படம் நெடுக நெருடலான வசனங்கள் அதன் நேர்மை குறையாமல் நம்மை தொடர்ந்து சுடுகின்றன.
பிங்க் இந்த வருடத்தின் மிகசிறப்பான படங்களில் ஒன்று. அமிதாப் தன்னுடைய  வக்கீல் கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செய்துள்ளார். டாப்ஸியும் மிக சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி குலாரி, கிடைத்த வாய்ப்பை அதிரடியாக பயன்படுத்தியுள்ளார்.

அனிருத் ராய் சவுத்திரி இந்த படத்தின் வாயிலாக தேசிய விருதிற்கு நியமிக்க படுவார் என்பது எனது நம்பிக்கை. இந்த படத்தின் எடிட்டருக்கும் அதுவே நடக்கும் வாய்ப்புண்டு - போதாதித்யா பேனர்ஜி.

PINK இளஞ்சிவப்பு - அனுமதிஇன்றி / உடன்பாடின்றி ஒரு ஆணுறுப்பு ஒரு பெண்ணுறுப்பில் நுழைவதை அல்லது ஒரு தனி பெண்ணுறைப்பையும் குறிக்கும் பெயர். படத்தோட பெயரை வச்சே உங்ககளுக்கு புரிஞ்சிருக்கும் படம் பயந்தாங்கோலிகளுக்கு இல்லை

PINK அவசியம் அனைத்துப் பெண்களும் தனது குடும்ப / நண்பர்களுடன் பார்க்க வேண்டிய படம்

Wednesday, September 7, 2016

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்

ஜியோ வந்து மறக்கடிக்கும் வரை இணையத்தை இரண்டு நாட்களுக்கு முன்புவரை " மாட்டிறைச்சி நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் - சீசன் - 2 " ஓடிக்கொண்டிருந்தது. ஸ்பைடர்மேன் ( திரைப்படம் ) பார்க்க வேண்டிய முக்கிய சமூக பொறுப்பு இருந்ததால் இன்றுதான் அதை  பற்றி எழுத முற்பட்டேன்.

உதித் ராஜ் என்ற பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்  - மாட்டிறைச்சி சாப்பிடததால்தான் ஹுசைன் போல்ட் தங்க பதக்கம் வென்றார். அதனால் . . . .  சொல்லி இருக்கிறார். இவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லலாம் என்று பொங்குவதற்கு எதுவுமில்லை. அவரர் கருத்தை சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆக எனக்கு உண்டு.

ஹுசைன் போல்ட், ராஜ் கூறிய தகவலுக்கு அவரை தரவாக இந்தக் குறிப்பையும் அவரை பதியவில்லை. நானும் இரண்டு நாட்களாக படித்த ஒரு இடத்தில் கூட அவருடைய கூற்றை நிரூபிக்கும் ஒரு தகவல் கூட நமக்கு கிடைக்கவில்லை.  கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு பேய் தலையை விரிச்சு சல்ஸா ஆடிச்சாம் என்பது போல நமக்கு கிடைத்த ஒரு வீடியோ அவருடைய கருத்திற்கு நேர்மறையான பொருள் கொண்டது. அதவாது ஹுசைன் இந்த வீடியோவில் நெறைய வாழைப்பழங்கள் சாப்பிடவும் என்கிறார் ( அட அவரே சொல்றாருங்க, பாருங்க  )

https://youtu.be/LDy6e21uGwA


அந்த இன்னொருத்தர் இருக்காரே அவர்தான் யோஹான் ப்ளேக் அவரும் அவரைப் போல ஒரு ஓட்டப் பந்தைய வீரர், அவரும் அவருடைய ஜமைக்கா நாடடையே சேர்ந்தவர், அவரும் ஒலிம்பிக்கில் ஓட்டத்தில் பதக்கங்கள் வென்றவர்.

இன்னொரு கொடுமையை கேளுங்க - யாம் அதாவது கிழங்கு நமக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா சக்கரவல்லி கிழங்கு, சேனை , சேப்பை கிழங்கு போன்றவை ஹுசைனின் வெற்றிக்கு காரணம் என்றும் பேசப் படுகிறது. இந்த இன்னொரு வீடியோ .. போய் பாத்துட்டு வாங்க
https://youtu.be/LDy6e21uGwA

எந்த இடத்திலும் இவர் மாட்டிறைச்சியை புகழ்ந்து, தன் வெற்றிக்கு காரணமாக சொல்லிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்ற நிலையிழும் கிடைத்த தகவல்கள் கூற்றுக்கு எதிர்மைறையாக இருக்கும் காரணத்தாலும் உதித் ராஜின் செயலை நாம் அரசியல் என்று பார்ப்பது சரியாகும்.

தனிப்படட முறையில் சைவ உணவு அனைத்து விதமான காரணிகளும் போதுமானது, அனைத்து மதமும்  ( இசுலாம் உட்பட ) கொல்லாமையை முன்னிறுத்துகின்றன. மேலும் படிக்கையில் விளையாட்டு வீரர்களுக்கு சைவ உணவு சரியானதே என்று முன்வைக்கும் ஒரு தகவல். இந்த தகவலை வெளியிட்டிருப்பது ஆஸ்திரேலியாவின் விளையாட்டு துறை

http://www.ausport.gov.au/ais/nutrition/factsheets/special_diets/vegetarian_eating

இதுல பாருங்க நமது விருப்பத் தேர்வான வஹாபிகள் முன்னின்று கொடி பிடித்தனர். அவர்களுக்கு பிரத்தியேக கேள்வி, ஹுசைன் போல்ட் உணவுகளில் பல இடங்களில் போர்க் என்ற உணவு வகை குறிப்பிட பட்டிருந்தது, அதை பற்றி உங்கள் யாருக்காவது எதாவது தெரிந்தால் எனக்கும் சொல்லவும். மேலும் பல விளையாட்டு வீரர்களின் உணவுப் பழக்கங்களை படிக்கையில் அனைவரது பட்டியலிலும் போர்க் என்ற வார்த்தை மீண்டு வன்டுகொண்டே இருந்தது.

Wednesday, August 17, 2016

ஜோக்கர் - ரௌத்திரம் பழகு

என்றாவது உங்களை நீங்களே சுமப்பது போல் உணர்ந்திருக்கிறீர்களா ? வெறும் ஒரு திரைப்படம் அதுவும் அதுவும் அதன் இடைவெளிக்கு முன்பே அப்படி ஒரு தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறதா ?

#ஜோக்கர்_பாராட்டுக்கள், கவனிக்க இது விமர்சனம் மட்டுமல்ல இது ஒரு பாராட்டும்.

இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி விளம்பரம் முதலே( அது கடந்த மாநிலங்களவை தேர்தல் பிரச்சார நேரமென்று நினைக்கிறேன் ) இந்த படத்துக்காக காத்துக் கிடந்து, நமது சுதந்திர தமிழக அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாகாமல் போய்விடுமோ சற்று மண் வாடியவறில் நானும் ஒருவன்.

ஒரு நிகழ்வில் இந்தப் படத்தின் இயக்குனர் ராஜு முருகனை சந்தித்தேன், தான் ஒரு கமியூனிஸ்ட்டு என்று அறிமுகம் செய்து கொண்ட அவரின் படம் என்பதால், இவரும் ஏனைய போலிகள் போல் வறண்ட - ஒரு சாரர் கருத்துக்களை இந்த படத்தில் முன் வைப்பார் என்ற முன்முடிவோடே இந்த படத்தை பார்த்தேன். ஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

புரட்சி பேசுவதாய் கதையின் களத்திற்கு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமில்லாத காடசிகளோ வசனங்களையோ இடைச்செருக்காமல் ஒரு வனப்பான முற்போக்குப் படம் இது. சில படங்கள் - ஏன் அனைத்துப் படங்களுமே ஏதோ ஒருவரியிலாவது ஏதோ ஒரு கருத்தை தீர்க்கமாய்ப் பதிகின்றன. ஜோக்கர் வரிக்கு வரி நொடிக்கு நொடி என்று அதை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது, -பின்விழைவுகளை கருத்தில் கொள்ளாமல். இயக்குனர் என்ற தளத்தைக் கடந்து, வசனகர்த்தாவாக, ஒரு திரைக்கடையாளனாக முருகன் வெகு சிறப்பு.

ஆரண்ய காண்டத்திலிருந்தே ( கொடுக்காய் புலியின் அப்பா ) ஒவ்வொரு படத்திலும்  தனக்கான ஒரு முத்திரையை தயார் செய்து வந்த குரு சோமசுந்தரம், இந்தப் படத்தில் அதை அழுத்தமாய்ப் பதிகிறார். கோமாவில் இருக்கு மனைவிக்கு பாவாடை மாற்றிவிடும் ஒரு நொடி காட்சியில் உடைந்து நம்மை அழவைக்கிறார். ஊர்கோவிலில் இருக்கும் சாமிக்கான குடையை தனதாக்கும் முன் அதை அவர் பார்க்கும் பார்வைக்கு ஷ்டாண்டிங் ஓவேஷன் ( ) தனது மனப்பிறழ்விழும், அழுகை கட்டுப்படுத்தி வீட்டுவேலைகளை இசைக்கு ( ஒரு கதாபாத்திரம் ) கட்டளையிடும் காடசியில் அவருக்கு இந்த பாண்டிய நாடே அடிமை.

அமைக்கப்பட்ட  கழிப்பறையின் அடிப்படை கட்டுமானத்தை, கையில் கிடைத்த ஒலிம்பிக் மெடல் போல் பார்க்கும் காட்சியில் தன்னை இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணிகளில் ஒன்றாக இனத்தை கொள்கிறார் '#ரம்யா பாண்டியன்'. 

#செழியன் பெயருக்கேற்றார் போல் மிகக் செழுமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இரவில் பெய்யும் மழையின் காட்சி, உடைக்கமுடியாத கதவுகள் முன் உதவிக்கு துடிக்கும் கால்களை காட்டும் காட்சி, துடிக்கும் உயிரை சொட்டு சொட்ட்தாக வடியும் சிறுநீர் பையால் காடசிப்படுத்தலென்று மிகையில்லாத அற்புதம் இவருடைய ஒளிஆளுமையும் பதிவும்.

ஒப்பனை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், 

மிகச்சிறு எடிட்டிங் பிசுறுகளைத் தவிர இந்தப் படம் அதி சிறப்பான படம். கஞ்சா பொடடலங்கள் போல் போதைக்கு ஒளியை விற்பனை செய்யும் திரையரங்குகள் இது போன்ற திரைப்படங்களை திரையிடுவதால், தன் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். டோரண்ட்டுகளில் திருடும் ஞமலிகளுக்கு அந்தப் பிராரப்தம் கூட கிடடாது போகும்.

கோடம்பாக்கத்தின் ஜனாதிபதி என்ற முறையில் இந்த ஆண்டின் மிக சிறப்பான படமென்றும், தைரியமான, பயனுள்ள படமென்றும் இந்தப் படத்தை அறிவிக்கிறேன். தேட்ட்றலா போய் பாக்கல பகத்சிங்க்க அவுத்து விட்ருவேன் பாத்துக்க

#ஜோக்கர்_பாராட்டுக்கள்

Tuesday, July 28, 2015

விண்ணில் பாய்ந்த கல(/லா)ம்

நீ தீவு
ஆறுபுறங்களிலும் சிந்தனைகளால் சூழப்பட்டவன்

உன்னை போன்ற சில சுவரொட்டிகள் ஓட்டியதால்
இன்றைய சில குட்டிசுவர்கள்
நிரம்பிடித்துக் கொண்டன
நேற்று  பெய்த மழை அதையும் உரிதுதிர்தது.

பலர்தன் பாவங்கள் கரைக்கச்செல்லும் கரைகளில்
முறையாய் குவிந்த தேசியப் புண்ணியம் நீ.
கப்பல்கட்டும் கரங்களால் வடிவம்பெற்ற
வியப்பான விண்கலம்

நீ தீவு
நார்புறங்களிலும் இளைஞர்களால் சூழப்பட்டவன்.

கணவை கட்டாய பாடமக்கினாய்
எளிமையை நெறியாக்கினாய்
அணுவியலை அழகாக்கினாய்.

இரும்பு மட்டுமல்ல மதம்-
எந்த உலோகமானாலும்
அவற்றை தங்கமாய் செய்த நல்ல ரசவாதி.
உன்னால் புத்தன் சிரித்தான் கண்ணன் மகிழ்ந்தான்.

மன்னித்துவிடு - உனக்கோர் இரங்கல்
இயற்ற நேரமில்லை !!
வெறும் ஐந்து வருடங்களே உள்ளன
நீ இட்டுச் சென்ற பணிகள் ஏராளம்

Friday, January 10, 2014

ஐத்தாஷ் ஹஸ்ஸான் நீ வாழ்க ! ! !

பழுத்த விஷம்
நாகமாணிக்கமாய் மாறுமாம்
இங்கு மடைமை, மறமாக.

‘நாய்களின் ஊழை' என்ற
உனது ஊரின் பெயரை,
‘குட்டிச் சிறுத்தைகளின் காடு’ என்றாக்கிடுக.

ஓடி விளையாடும் வயதில் நீ
மோதி விளையாடியிருக்கிறாய்,

செல்லமே, நீ விதையாகியிருகிறாய்.

உன் போக்கில் நீ மருத்துவனாகியிருந்தால்
நிச்சயம் சில உயிர்கள் காத்திருப்பாய்
இன்ஷா அல்லாஹ், இன்றோ
பல சமூகங்கள் உயிர் பெற்றன உன்னால்.

உங்கள் ஊர் மேகங்கள்
வீரத்தின் மாரி பொழிந்திருக்கும்
நெல், கோதுமைகளில்
பச்சயம் அல்ல தன்மானம் கொழித்திருக்கும்.

அல்லாஹு ஆன பில்யக்கினி
வபிஷ்ஷிலாஹி சாஃப்தாடி
எனது நன்னம்பிக்கையாலும்
எனது ஆயுதங்களாலும்
நான் என் எதிரியை எதிர் கொள்வேன். 
மேற்கூறிய வரிகள் லிபியாவின் பழைய தேசியகீதத்திலிருந்து எனக்குப் பிடித்தவை.
ஐத்தாஷ் ஹஸ்ஸான் நீ வாழ்க ! ! !
 

Friday, December 27, 2013

இஸ்ஸ்கூல் போவோமா - பகுதி-1

முதல்தடவை போகும்போதே விளங்கிட்டோம்!!!???  இப்போ யென்னவாம் . . அது தானே  உங்க கேள்வி. . சங்கதில பதிவு படிக்கிற அளவுக்கு வெட்டியாதான இருக்குறீங்க . . .சும்மா வாங்க பாஸ். படிச்சவன் நம்ம நாட்டுல MLA, MPஆரானோ இல்லியோ கண்டிப்பா அவன் ஸ்கூல் காலேஜ் வைக்கணும். அது தானே கரெக்ட்டு..பின்ன எப்படி வளர்ச்சிப் ( யாரோட ? ? ) பணிகளுக்கும், நலச்சேவைகளுக்கும் ( இடியாப்பம் மாதிரி இருக்குமே . . . . அது இல்லங்க ) நிதி திரட்ட முடியும்.


மிகத்தரமான பள்ளிகள் என்றும், அறிவின் ஊற்று, 
குடம்,சொம்பு, என்றும் சோப்பு, சீப்பு,
பேஸ்ட் விளம்பரங்களுக்கு இணையாக தன்னை சந்தையிட்டு கொள்ளும் பள்ளிகள் ஒரு புறம். இன்னொரு புறம் JUNE மாதம் ஆரம்பிக்கும் பள்ளிகளுக்கு FEB மாதமே அட்மிஷன் முடிந்து விட்டது என்று வறட்டு மூடம் போட்டுக்கொள்ளும் பள்ளிகள் ஒருபுறம். கேட், வாட்ச்மன், காம்பவுண்டு   க்யூ, பட்டு புடவை வாங்க வந்தது போல் கூட்டம், அதே பட்டுப்புடவை விலையில் அப்பிளிகேஷன் என்று அனைத்தையும்  முடித்தபின்னும் முடிவதில்லை இந்த ஷங்கர் பட பட்ஜெட் பள்ளிகளின் ஜம்பங்கள் . . நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ? ? என்ற கேள்வி இந்த பெற்றோர்கள் சங்குக்குழியில் துடிப்பதை பார்த்திருக்கிறேன். அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை கூட இந்தக் கேள்விகள் சரி என்றாலும் "மறைக்கப்பட்ட தன் முதல் காதல்" போல் வைத்து கொள்கிறார்கள்.

பள்ளிகளில் நுழைவுத்தேர்வு

முன்னொரு காலத்தில், ஐந்து வயது நிரம்பியதர்கான சான்று கழுத்தை சுற்றி காதை தொடும் திறன் இருந்தால் போதும் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கலாம். ஆனால் இன்று மேற் கூறிய பட்டியலில் உள்ள பள்ளிகள் முதல், தம்படிக்கு பெறாத பள்ளிகள் வரை கச்சைக்கட்டிக் கொண்டு நுழைவுத்தேர்வு நடத்துகின்றன. அடுத்து, அந்த தேர்வின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் பள்ளியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.இது தவிர, சேர்மேன், கவுன்சிலர்  போன்ற உயர்ந்த பதவி வகிப்பவர்களின்  கடிதம், வைட்டமின் M(தெரியாதவர்கள் சூது கவ்வும் பட காணா பாலா பாட்டை கேட்கவும் ) போன்ற அதிஜனநாயக முறைப்படியும் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. இதில் நமது கேள்வி, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கான பள்ளி என்று ஏன் விளம்பரம் செய்ய வில்லை என்பதல்ல. ஒரு பணியமர்வுக்கு, தொழில்நுட்ப-படிப்பு, மருத்துவம் போன்ற சேர்க்கைகளில் நுழைவுத்தேர்வு அவசியம். அங்கே மதிநுட்பம், தகுதி போன்றவை கொண்டு  தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி ஒரு கட்டாயம் பள்ளிகளில் எதற்கு????இந்த கேள்விக்கு பல ஹார்வர்ட் மண்டைகளின் பதில் - The Tests are basically focussed to test on Basics of Lanuguage, mathematics and  Logic. ( இந்த தேர்வுகள், குழந்தைகளின் மொழி, கணிதம், மற்றும் சில அடிப்படைகளை சோதிக்க அமைக்கப்பட்டவை என்பதே இதன் அர்த்தம்) . அடிப்படைகள் கூட தெரியாத குழந்தைகளை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும் ? ?
தம்பி ஒரு சோடா ஒடப்பா என்னும் அளவுக்கு அருமையான பதில். . . அது நல்லவார்த்தை சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது . . . இந்த வலது கைய்ய இடது நெஞ்சுல வச்சமாதிரி ஒரு வார்த்தை சொல்லுவாங்கல்ல . . . சூப்பர்ங்க....... கரெக்டா கண்டுபுடிசீங்க . . மனசாட்சியே தான் . . உங்களுக்கு 10 பாய்ண்ட. 
இங்கு மதிப்பெண் அடிப்படையில் ஒரு குழந்தையை தேர்வு செய்யும் பொழுது - அந்தக் குழந்தை இயற்கையிலேயே தகுதி உடைய பிள்ளை அல்லது முன்னமே போதிக்கபட்ட பிள்ளை என்பது மறுக்க முடியாது. இந்த அடிப்படையில் ஒரு குழந்தையை சேர்த்து கொள்ளும் பொழுது அந்த பள்ளியோ, ஆசிரியரோ தனது பணியை எளிமையாக முடித்துக் கொள்ளலாம் ( நோகாம நோம்பு .. . . ஸ்டைல் ). ஆகையால்  இந்த பள்ளிகளின் தனித்தகுதி என்பது கேள்விகுறி ஆகிறது. ஒரு இயலை புரிந்துகொள்ளும் திறன், புரிந்ததை நினைவு படுத்தும் திறன், நினைவுகூர்ந்ததை சரியாக வெளிப்படுத்தும் ( எழுதும் ) திறன் இவை மூன்றையும்  அடிப்படையாக கொண்டது தான் கல்வி. இந்த மூன்று திறனும் வேறு வேறு கலவையில் குழந்தைகளிடம் இருக்கும். இந்த நுழைவுத்தேர்வுகள் இந்த மூன்று அடிப்படையை பரிசோதித்து, இந்த மூன்றும் முன்னமே ஒருங்கே பெற்ற குழந்தைகளை சேர்த்துக் கொள்கின்றன. அதாவது, இன்னும் சரியாய் சொன்னால் தன்னுடைய சுயஆதாயங்களுக்காக, பள்ளிகள் தன்னுடைய கடமையிலிருந்து விலகிக்கொள்கின்றன. அடுத்த கட்டமாக முன்னமே திறமையான குழந்தைகளை தேர்ச்சி பெறசெய்ததின் வெற்றியை தன் பெயரில் தம்பட்டம் அடித்து ஈன பிழைப்பு நடத்துகின்றன.

சச்சின் இயற்கயிலேயே நல்ல BATSMAN. அவரிடம் இருக்கும் திறமையை அவருடைய இளம் வயதிலேயே புரிந்து கொண்டு அவருக்கு பயிற்சியும் கொடுத்தார் ரமாகாந்த் அச்ரேகர். ஆனால் சச்சின் என்ற இந்திய விளையாட்டு வீரரின் வெற்றிக்குக் காரணம் அச்ரேகர் ஆகி விட முடியாது. கமல், மற்றும் ரஜினி போன்ற நடிகர்கள் தன்னுடைய குருநாதர் என்று உரக்கச் சொல்லும் பெயர் கே. பாலசந்தர் என்பதுதான். ஆயினும் இந்த இருவரின் திறமையை இணைசெய்யும் அளவிற்கு கே.பி`யின் திறமையும் உலகமரிந்ததே. ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே கே.பியோ அச்ரேகரோ, கமலையும், சச்சினையும் தேர்வு செய்யாமலோ, பயிற்சி குடுக்காமலோ இருந்திருந்தால் அவர்கள் தன்னுடைய கடமையிலிருந்து தவறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அப்படி அவர்கள் தேர்வோ/பயிற்சியோ கொடுக்காததால் சமுதாயத்துக்கு எந்த இழப்பு / நஷ்டம் இல்லை. ஆனால் பள்ளிகள் இதை செய்யும் பொழுது நேரடியாகவும், மறைமுகமாகவும் -  அந்த ( வாய்ப்பு மறுக்கப்பட்ட) குழந்தையின் நாளைய சமூகமும் , அந்த பெற்றோற்களின் இன்றைய சமூகமும் நேரடியான பாதிப்பிற்குள்ளாகின்றன. இன்னும் இந்த அவலத்தை உற்றுப்பார்கையில், மேற்கூறிய தகுதிகள் மிகக் குறைவாக உள்ள பிள்ளை - ஒரு அத்தியாவசிய மருத்துவ உதவி மறுக்க பட்ட, இன்னும் ஒருபடி மேலேபோய் அடிப்படை குடிமையில் உரிமைகள்(civil rights) மறுக்கப்பட்ட  நிலையெனலாம்.
பள்ளிக் கல்விகளை ஒருங்கு செய்யும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் RTE ( Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009),சட்டமும் பள்ளிகளை தேர்வு அடிப்படையில் சேர்கை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்துகிறது.  

                                                                                                          . . . தொடரும். . . 

Thursday, July 18, 2013

வ(வா)லி. . . . . . .




இன்று எய்தவன் ராமனென்றால் கூட
அவன் கோதண்டத்தை முறி,
நேராகவே நின்று எய்திருந்தாலும்!

தமிழ்நாட்டிற்கு இல்லையென்றால்கூட
தமிழுக்கு இன்று கருப்பு தினம்;
இன்று மாலையோடு திரையின்
மொழி நிறக்குருடாகியிருக்கும்;
நிழலின் மொழிகளுக்கு
நிறச்சாயம் நீ, ரங்கராஜா.. . .

 சுவாசம்   ஈடேறாமலா ?? - இருக்காது
நீ வரிகள் ஈடேறாமல்தான்
உடைந்திறுப்பாய்

இன்று இரவோடு உறங்கச்சென்ற
வார்த்தைப் பிள்ளைகள்
நாளைய கவிதை நலிந்த கதிரோடு எழுகையில்
உன்னைத் தேடி அழுமே!
என்ன சொல்லி ஆறுதல் செய்வேன்

அந்த தோட்டத்து வெற்றிலைகள்
முதல் முறையாய் நாளை அங்கு வாடியிருக்கும்
என்ன கொண்டு அவற்றை தேற்றுவேன்

இனி இங்கே எவனொருவன் காதலித்தாலும்
அவன் கவிதைகள் நிச்சயம் உன் ஜாடையில்தான் பிறக்கும்
இல்லையென்றால் அது இன்குபேட்டரில் தான் இருக்கும்
தமிழின் வினைத்தொகை நீ
மூன்று காலத் தமிழிழும் விரைந்திருக்கிறாய்


கவிதை செய்தாய், நாங்கள் காதலித்தோம்
காமம் ஈட்டினாய் கட்டுண்டு கிடந்தோம்
இப்படி போனாயே இப்போது என்ன செய்வது
உன் மொழியின் வயதை கருத்தில் கொண்டு
ஒப்பாரி செய்தால் நீ அற்பாயசில்தான் போயிருக்கிறாய்.

 நீ இசைந்ததுபோல்
தன்னுயிர் பிரிந்ததை பார்தவறில்லை
இன்னுயிர் பிரிந்ததை நானும் பார்த்து நின்றேனே. . . . . . .

Monday, July 8, 2013

சிங்கம்-2, திரைவிமர்சனம்


சின்னவயசுல உங்களுக்கு கழுதைப்பால் குடிக்க குடுதுருக்காங்களா???சூர்யாவுக்கு நெறையா குடுத்துருப்பாங்க போல. நல்லதுதான்!!


துரைசிங்கம் தன்னுடைய சென்னை பராக்ரமங்களை முடித்து விட்டு, தன்  சொந்த ஊரான நல்லூர் அருகே உள்ள பெருநகரான தூத்துக்குடி`யில் கரை ஒதுங்குகிறார். அங்கே தமிழக உள்துறை மந்திரியின் மேற்பார்வையில் பால்அண்டர்கவர் ஏஜென்ட்டாக ( அட அந்த ஏஜென்ட் இல்லீங்க, இது போலீஸ் உளவாளி  - 'அந்த ஏஜென்ட்' ) இருந்து கொண்டு ஒரு பள்ளியில் NCC வாத்தியாராக வேலை செய்கிறார். போலீஸ் வேலைய விட்டதுனால இவுங்க அப்பா காவ்யாவுக்கும் சிங்கத்துக்கும் நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிப்போடுகிறார்.  இந்த சினிமா அப்பனுகளுக்கே உள்ள திமிரு ( சினிமால மட்டுமா`ன்னு கேக்குறீங்களா??? ). 




அப்போ தூத்துக்குடியில் தன்ராஜ், பாய், சகாயம் -  மூவரும் மத நல்லிணக்கத்துடன் மிகப்புனிதமான போதைமருந்து தொழிலை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவன் டானி- எப்பவும் போல் ரூம்போடாமல் யோசிக்கும் வில்லன்; இவர்களை வேட்டையாட துரத்தும் சிங்கம். இதுகெடயில சிங்கம் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் அழகான மாணவி ஹன்சிகா. . . மாணவியா`வா??. ஏங்க தளபதி காலேஜ் போகலாம்.. . கனவுகன்னி ஸ்கூல் போகக்கூடாதா  ? ? ? . . . அதே பள்ளியில் பியூன் வேலை செய்யும் சந்தானம்..


மற்றபடி கழுத்துச்செயின் தெரிய ஓடி, சட்ட கிழிய, தொண்ட கிழிய சண்டைபோட்டு வில்லனை பிடிக்கும் நம்ம துரைசிங்கம். படத்தின் செகண்ட் ஹீரோதான் சூர்யா, முதல் ஹீரோ திரைக்கதையும் எடிட்டிங்க்கும்தான் ( V.T.விஜயன்) -அதிரடி. எப்பவும் போல் ஹரி மிகஅருமையாக இயக்கத்தையும் திரைக்கதையையும் கையாண்டுள்ளார். ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் படத்தின் சுழற்சியைகூட்டி, உச்சா கூட போக விடாமல் சீட்டில் கட்டிவிடுகிறார். அனுஷ்கா`விற்கு சொல்லும் அளவிற்கு ஒரு வேலையும் இல்லை. குடுத்த வேலையை அரை  திருப்தியுடன் செய்திருக்கிறார் DSP. ஒரு முழுநீள  சூர்யா ரசிகனுக்கும் ஆக்ஷன் ரசிகனுக்கும் மூக்குபிடிக்க தீனி இந்த சிங்கம்-2.

உழைப்பே உயர்வு இதற்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டு ஹரி மற்றும் சூர்யா அவர்களின் சிங்கம்-2. கண்டிப்பா போய் பாக்குறீங்க ... ஓகே. ஹரி`யின் சூப்பர்ஹிட் சாமியும் - ஹிந்தி`யில் ரீமேக் ஆகி - POLICEGIRI என்று  வெளியாகி உள்ளது என்பது துணுக்கு செய்தி.

Sunday, June 16, 2013

THE MAN of STEEL [ 3-D ] - திரைவிமர்சனம்

முப்பெரும் விழா மாதிரி, நான்கு படங்களுக்கு இசை வெளியீடு மாதிரி கொத்தா,"தீயா வேலை செய்யணும் குமாரு. . . , தில்லு முல்லு  -2, மற்றும் இந்த படம் மொத்தமாக முப்பெரும் திரைவிமர்சனம் ட்ரை பண்ணலாம் என்று முடிவுசெய்தேன் . . . . ஓசியில் டிக்கெட் வாங்கிக்கொடுத்து இந்த ஏழைக்கு அருள்செய்ய யாரும் கிடைக்காத சூழ்நிலையில் சொந்த செலவிலேயே(வேறு வழியில்லாமல்!!!) படத்துக்கு போக    முடிவு செய்தேன். .

2008 முதலே 'THE MAN of STEEL' இந்தப் படத்தின் இவன், இவை, இப்படிகளை ஆவலுடன் படித்து 2011இல் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த சுப்பர்மேன் பக்தர்களில் நானும் ஒருவன். அது மட்டுமல்லாது, இந்த படக்குழுவில் நோலனில் துவங்கி, மார்க் ஸ்ந்ய்டர், டேவிட் கொயர், ஹான்ஸ் சிம்மர், கெவின் கோஸ்ட்நேர் என்று அந்த பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போய் ரஸ்ஸல் க்ரோவ் என்ற பெயர் சேர்கையில் இந்தப் படத்திற்கான சுழற்சியை(எதிர்பார்ப்பை) ஒருபடி மேல் எடுத்துச் சென்றது. கடந்த  2012ன் இறுதியில் இருந்தே இந்த படம் - "வரும்ம்ம்ம் ஆனா வராது" என்பதுபோல் இருந்தது. 

கதை - ஜெர்ரிசிகேல் மற்றும் ஜோ ஷுஸ்ட்டர் இந்த SUPERMAN கதாபாத்திரத்தை 1933இல் படைத்தது முதலே ஒரே கதைதான். "க்ரிப்டன்" என்ற அழிவு நிலையில் உள்ள ஒரு கிரகம்  , அங்கு பிறக்கும் ஒரு குழந்தை, பூமிக்கு வந்து சேர்கிறது.அதிசக்தி கொண்ட அந்தக்குழந்தை- வளரும் பொழுது, வளர்ந்த பின் - பேண்ட்க்கு வெளில சிவப்பு ஜட்டி போட்டுகினு சுத்தி சுத்தி - பறந்து பறந்து தனது சக்தியை பயன் படுத்தி பூமியை பலவிதமான தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவதுதான், இதன் கதை. பெருவாரியாக, ஒவ்வொவொரு பதிவிலும், வில்லன்களும் அவர்களின் சக்திகளும்தான் வேறுவேறு.  யாரு பெத்த பிள்ளையோ நமக்காண்டி உசுரகொடுத்து சண்டை போடுது என்று SUPERMAN எப்பவும்போல், வேற ஹோட்டல் ஆனாலும் அதே இட்லி அதே சட்னி கதைதான்.இந்தப் படத்திலும் அதேதான்.ஆனால் சிவப்பு ஜட்டி இல்லை. ஜட்டி ஒரு மேட்டரா என்று கேட்பவர்கள் இந்த பதிவை முதலில் படிக்க.

வார்னெர்-ப்ரோஸ் தயாரிப்பில், ச்ன்ய்ட்டெர் இயக்கத்தில் வெளியாகி மேற்கூறிய பெயர்களாலும் பெரிய எதிர்பார்ப்போட வெளிவந்த இந்த திரைப்படம் அதிதிருப்தியும் இல்லை வெற்றியும் இல்லை.முழு ஆண்டு பள்ளி விடுமுறையின் இறுதியில் வெளியாகி இருந்தாலும், இந்தப் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படவில்லை.ஒரு தீவிர superman ரசிகனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருகிறது. மற்ற superman படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த superman படத்தில் - திரைக்கதையிலும், காட்சிகளிலும் ஒரு வறட்சி தெரிகிறது.அமீர் மொக்ரி`யின் இணையற்ற ஒளிப்பதிவில் உள்ள ஆக்கம் டேவிட் ப்றேன்நேர்`றின் வெட்டிங்கிலும் ( எடிட்டிங்க்கு தமிழ்பா ! ! ! ! ), வரைகலையிலும்(GRAPHICS) இல்லை. இஸ்ஸ்கூல் பசங்கபோல், சத்யம் தேட்டரில், Flooring கலர் முதல் ஊழியர்களுக்கான சீருடைகலர் வரை அனைத்தையும் காப்பி அடிக்கும்காமல் சொந்தமாகவே குறைந்த செலவில்செய்யும் சங்கம் தேட்டரின் ஸ்பீக்கர், ஜிம்மர்`இன் இசை+இரைச்சல் சங்கமம்  - தலைவலிடா சாமி. SUPERMANநின் MAN-பகுதி அதாவது CALRKE-KENT மிக அருமையாக யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி ஒன்றுதான் நெஞ்சுக்கு நிம்மதி - யாருக்கு ? ? ? யாருக்கோ ! ! ! ! ! !
 

THE MAN of STEEL உயர உயர பறந்தாலும் SUPERMAN ( பழைய படங்கள் )ஆக முடியல

THE MAN of STEEL என்பது உண்மையில் தலைவர் STALINநை குறிக்கும் என்ற குருந்தகவலோடு ஜூட் விடுகிறேன்.